28/09/2026
90களின் பிற்பகுதியில் காதல் படங்கள் தமிழ் சினிமா உலகை ஆக்கிரமித்தன. பார்த்த காதல், பார்க்காத காதல், பேசாத காதல், உயிரை விடும் காதல், டெலிபோன் காதல், லெட்டர் காதல் என வகைவகையான காதல். பெரும்பாலான ஹீரோக்கள் இதயம் முரளி கணக்காகத்தான் சுற்றினார்கள். காதல் கடிதம், கவிதை, ரோஜாப்பூ, சாக்லேட் இவையெல்லாம் காதல் சின்னங்கள். அன்றைய இளைஞர்களும் அப்படித்தான் இருந்தார்கள். காதல் என்ற ஒற்றை வார்த்தைக்கும் ஐஸ் மாதிரி உருகுவார்கள். ஒருதலைகாதலுக்காக கூட ஓயாது சுற்றுவார்கள்.
அப்படியே காலம் மாறுகிறது 2000 பிற்பகுதியில் தமிழ் சினிமா ஹீரோக்கள், இயக்குனர்கள் எல்லாம் டாஸ்மாக் நோக்கி ஓடுகிறார்கள். எல்லா படங்களிலும் குடி. சோகம் என்றால் குடி, சந்தோசம் என்றால் குடி, ஹீரோ, வில்லன், காமெடியன் என அனைவருமே குடித்துக் கொண்டே இருந்தார்கள். சமூகத்திலும் அந்த மாற்றம் ஆரம்பித்தது.
குடிப்பது என்பது சரக்கடிப்பதாக மாறியது. அன்றைக்கும் தினமும் குடிப்பவர்கள் இருந்தாலும், என்றைக்காவது குடிப்பவர்கள் மறைந்து யாருக்கும் தெரியாமல் குடித்து விட்டு சத்தம் காட்டாமல் வீட்டுக்கு வருவார்கள். ஆனால் அந்த நிலை மாறி சரக்கடிப்பது ஸ்டேட்டஸ் ஆக்கப்பட்டது. குடிக்கு நியாயங்கள் கற்பிக்கப்பட்டது. சோஷியல் ட்ரிங்கிங் என்று வார்த்தை மாறியது. நண்பர்கள் கூடினாலே சரக்கு மட்டுமே ஒரே பொழுதுபோக்கு என்று மாறிவிட்டது. விளைவு. டாஸ்மாக்கில் மட்டும் தினமும் ஒரு கோடி பேர் சரக்கடிக்கிறார்கள். மற்ற தனியார் பார் கணக்கெல்லாம் தனி. ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் குடிக்கு அடிமையாகி விட்டது. அரசாங்கமும் சாராய பணத்திற்கு அடிமையாக இருக்கிறது.
குடி இந்த சமூகத்தில் நார்மலைஸ் ஆனது. இப்போது குடிக்கு எதிராக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறோம்.
அதே காலகட்டத்தில் ஹீரோ பாடும் டாஸ்மாக் பாடலில் ஹீரோயினை திட்ட ஆரம்பித்தார், அடிடா அவளை, உதைடா அவளை என்று பாட ஆரம்பித்து, டாஸ்மாக் பார் பாடல் இல்லாத படங்களே இல்லை எனும் அளவுக்கு அப்போது வந்த ஒவ்வொரு படத்திலும் டாஸ்மாக் பார் பாடல்கள். அதிலும் பெண்களை திட்டும் பாடல்கள். காதல் தோல்வி என்றால், அது தோல்வி கூட இல்லை, கடைசியில் அதே ஹீரோயினுடன் தான் ஹீரோ சேர்வார். ஆனாலும் இடைப்பட்ட நேரத்தில் பெண்ணைத்திட்டி ஒரு பாடல். எவண்டி உன்னை பெத்தான், சத்தியமா நீ எனக்கு தேவையில்லை, இன்னும் பல பாடல்கள்.
அது அப்படியே சமூகத்திலும் எதிரொலிக்க ஆரம்பித்தது. பெண்கள் மீதான தாக்குதல், வன்கொடுமை, காதலிக்கவில்லை என்பதற்காக தாக்குதல், கொலை தொடர்கதையாகிப் போனது.
பெண்களை தாக்குவதும் நார்மலைஸ் ஆனது. இன்று பெண்களை பாதுகாக்க சிங்கப்பெண் படை அமைத்திருக்கிறோம்.
இந்த காலகட்டத்திற்கு முன்பும் இவையெல்லாம் நடந்திருக்கிறது. ஆனால் எப்போதாவது ஒன்று. ஆனால் குற்றங்களின் எண்ணிக்கை எப்படி அதிகமாகி இருக்கிறது என்பது தான் என்னுடைய பாயிண்ட்.
2000 வரை தமிழ் சினிமாவில் பெற்றோர்களுக்கு மரியாதை, ஆசிரியர்களுக்கு மாறியது, வயதில் பெரியவர்களுக்கு மரியாதை என்பதெல்லாம் default ஸீன். அப்படி மரியாதை இல்லாமல் பேசும் காட்சி கூட, ஹீரோவால் தட்டிகேட்கப்படும், அறிவுரை சொல்லப்படும்.
ஆனால் அதன் பிறகு சினிமா மாறுகிறது. அப்பா அம்மாவை மரியாதை குறைவாக பேசுவது, பெத்த அப்பனையே அடிப்பது, வயதில் பெரியவர்களை "யோவ் பெருசு" என்று பேசினால் தான் கெத்து என்று கற்றுக்கொடுத்தது. மொத்தத்தில் மரியாதை என்றால் என்னவென்றே தெரியாத ஒரு சமூகத்தை சினிமா கட்டமைத்தது. அதனுடைய விளைவு இன்று சமூகத்தில் எதிரொலிக்கிறது. ஒரு காலத்தில் 25 வயது இளைஞர்கள் ஊருக்குள் குடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் கூட பொதுவில் செய்ய முடியாது. யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயத்தில், சரக்கு எல்லாம் வாங்கிக் கொண்டு ஊருக்கு வெளியே குடித்து விட்டு, யாருக்கும் தெரியாமல் இருந்து விடுவார்கள். இன்று டாஸ்மாக் பாரில் பள்ளி மாணவன், கல்லூரி மாணவன், வயதில் பெரியவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து சரக்கடிக்கிறார்கள்.
யாருக்கும் மரியாதை இல்லை. அவரவர் தங்கள் மரியாதையை காப்பாற்றிக்கொள்ள ஒதுங்கி செல்ல கற்றுக்கொண்டு விட்டார்கள்.
2010 க்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமா மாறுகிறது. டாஸ்மாக், குடி என்று எத்தனை நாட்கள் காட்டுவது என்று அடுத்த கட்டத்திற்கு நகர்கிறார்கள். போதை பொருள்.
எல்லா படங்களிலும் விதவிதமான போதை மருந்துகள். அறிவியல் ஆய்வு போல எந்த போதை மருந்து சாப்பிட்டால் எப்படியெல்லாம் போதை கிடைக்கும் என்பதை படம் வரைந்து பாகங்கள் குறித்து விளக்கியது திரைப்படங்கள். அதுவும் போதை மருந்து விற்று கிடைக்கும் அபரிமிதமான பணம் சமூகத்தை உறுத்தியது.
விளைவு... சமூகத்தில் போதை மருந்து கரை புரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இது தப்பு என்று யாருக்கும் தோன்றவே இல்லை. அரசாங்கம் நினைத்தாலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பெருகிவிட்டது. போதைக்காக சண்டை, போதைக்காக கொலை, போதையை போட்டுகொண்டு கொலை என்று விதவிதமாக சினிமா காட்சிகள் சமூகத்திலும் பிரதிபலித்துக்கொண்டே இருக்கிறது.
இன்று போதை மருந்து எதிராக ஒரு போர் நடத்த வேண்டிய அளவுக்கு பாதிப்பு அதிமாகிக்கொண்டே செல்கிறது.
இன்னொரு பக்கம் வன்முறையை கையில் எடுத்தது சினிமா. முன்னொரு காலத்தில் கத்தியால் குத்தினால் கூட குத்திய இடத்தை காண்பிக்காமல், நடிகர்களின் ரியாக்ஷனைதான் காண்பிப்பார்கள். நடிகர்களும் உண்மையிலேயே குத்துப் பட்டதைப் போல நடிப்பார்கள். இன்று அதற்கெல்லாம் வேலையே இல்லை. கை வேறு, கால் வேறு, தலை வேறு என்று தனித்தனியாக பிய்த்து எடுக்கிறார்கள். ரத்தம் ஆறாக ஓடுகிறது.
சிலருக்கு ரத்தத்தைப் பார்த்தால் மயக்கம் வரும். அப்படிப்பட்டவர்கள் கடந்த சில வருட சினிமாவை தொடர்ந்து பார்த்திருந்தால், கண்டிப்பாக சரியாகி இருப்பார்கள். அந்தளவுக்கு ரத்தம்.
முகத்தில் ரத்தம் தெறிந்திருந்தால் தான் ஹீரோயிசம். பற்களுக்கு இடையில் அரிவாளை வைத்தால் ஹீரோயிசம். பிணத்தின் மீது அமர்ந்தால் ஹீரோயிசம். ஏன் எதற்கு என்றே தெரியாமல் நூற்றுக்கணக்கானவர்களை கொன்று குவிக்கிறார் ஹீரோ. ஒவ்வொரு படத்திலும் இந்த எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே செல்கிறது.
ரொம்ப பழைய படங்களில் கெட்ட செய்தி கொண்டு வரும் அடியாளைக் கூட வில்லன் கொள்வான். பேட்நியூஸ் என்று ரகுவரன் சுடுவதை போல. ஒருகாலகட்டத்தில் அதெல்லாம் நின்று விட்டது. ஆனால் இன்று காரணமே இல்லை. கண்ணில் பட்டால் தலை வெட்டி எறியப்படும்.
இதனுடைய விளைவும் சமூகத்தில் தெரிகிறது. கொலைகள் சர்வசாதாரணமாக நடக்கிறது. போதையை போட்டு விட்டு வெறித்தனமாக வெட்டுகிறார்கள். யாருக்கும் பயம் இல்லை. பட்டப்பகலில், காவல்நிலைய வாசலில், பல ஆயிரம் பேர் முன்னிலையில் எதற்கும் கவலை இல்லை. "போட்றா அவனை" என்பதும் ஹீரோயிசம் தானே. கெத்து தானே. நாமெல்லாம் கை தட்டினோமே.
கொலைகளை தடுக்க முடியாமல் அரசு திணறிக்கொண்டிருக்கிறது. கொலைச்சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம்.
இதே காலகட்டத்தில் குடும்ப உறவுகளை மீறிய திரைப்படங்கள் இன்னொரு பக்கம். லிவிங் டூகெதர், ரிலேஷன்ஷிப், திருமணத்திற்கு முன்பே உறவு, கேட்டால் கற்பை உடைக்கிறார்களாம். திருமணம் கடந்த உறவு, முறை கடந்த உறவு இன்னும் என்னவெல்லாமோ. சமூகத்திலும் இந்த மாற்றங்கள் தெரிகிறது. எல்லாமே நார்மலைஸ் ஆகிறது.
அதனுடைய தொடர்ச்சியாகத்தான் தன்பாலின உறவு பற்றிய படங்கள், கதைகள் வருகிறது. நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்காக பேசுகிறோம் என்று படங்கள் எடுக்கிறார்கள். அதை அனைவரும் புகழ்கிறார்கள். இதுவும் சமூகத்தில் எதிரொலிக்கும். சமூகம் தட்டுத்தடுமாறும்.
இன்னும் எத்தனையோ மாற்றங்கள் சினிமாவினால் தான் இந்த சமூகம் அடைந்திருக்கிறது. சிலர் இந்த கருத்தில் மாறுபடலாம். சமூகத்தில் நடப்பதைத் தான் சினிமாவில் பிரதிபலிக்கிறோம் என்று சொல்வார்கள். கடந்த 30 வருட சினிமா வரலாறை இங்கே சுருக்கிக் கொடுத்திருக்கிறேன். இந்த மாற்றங்கள் சமூகத்தினால் நடந்த மாற்றங்களா? கண்டிப்பாக இல்லை. சினிமாவைப் பார்த்து சமூகம் மாறியிருக்கிறது. மாற்றியிருக்கிறார்கள் என்று கூட சொல்லலாம்.
90 களுக்கு முன்பாக கவர்ச்சி காட்டுவதற்கென்றே நடிகைகள் இருப்பார்கள். ஜெயமாலினி, சில்க், டிஸ்கொ சாந்தி, ஷகிலா. இவர்கள் எல்லாம் அவர்களுடைய கேரியரில் காண்பித்த கவர்ச்சியை விடவும் அதீத கவர்ச்சி இன்று நார்மலைஸ் ஆக்கப்பட்டு விட்டது. நடிகைகள் தான் கவர்ச்சி காண்பிக்க வேண்டுமா? என்று சாதாரண பெண்களே கிளிவேஜ் தெரியும்படி போட்டோ போடுகிறார்கள். அதை நாம் சுட்டிக்காட்டினால் அவ்வளவு தான் போச்சு. கடைசியில் என் அம்மாவுக்குத்தான் கெட்ட பெயர். துப்பட்டா போடுங்க என்று சொன்னாலே பிற்போக்குவாதி என்று சொல்லப்படும் உலகில், எதற்கு அடுத்தவர் வம்பு. கிளிவேஜ் காட்டினால் பார்த்தோமோ, அடுத்த போட்டோவுக்கு நகர்ந்தோமா என்றில்லாமல்.?
இது போல இன்னும் எண்ணற்ற விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இவ்வளவு ஏன் இதில் டாக்ட்ரெட் கூட செய்யலாம். சொல்ல மறந்த இன்னொரு விஷயம் சினிமாவில் வந்த சாதிப் படங்கள். இது எந்தளவு சமூகத்தில் தாக்கம் செய்திருக்கிறது என்பதை நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை. எரிமலை போல எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும்.
சினிமா என்பது ஒரு மாய உலகம். லட்சத்தில் ஒருவர் ஜெயிக்கிறார். நாங்கள் சமூகத்தை மேன்மை அடைய படம் எடுக்கிறோம். புரட்சிகர படம் எடுக்கிறோம் என்று சொல்லும் எவனுமே, அந்த புரட்சியை தன் குடும்பத்தில் செய்ததில்லை. இவ்வளவு ஏன் மேலே சொன்னவற்றை கண்மூடித்தனமாக ஆதரித்து, தன்னை முற்போக்கு என்று காட்டிக்கொள்ளும் பெரும்பாலானவர்கள் தன் குடும்ப போட்டோவைக் கூட இங்கே ஷேர் செய்வதில்லை. அவர்கள் வீட்டுப்பெண்களுக்கு சமூக வலைத்தளத்தில் அக்கவுண்ட் கூட இருக்காது. ஆனால் சோஷியல் மீடியாவில் இவர்களின் முற்போக்கு இருக்கிறதே.. அடேங்கப்பா..
தமிழ்ச் சமூகம் சினிமாவினால் பெற்றதை விடவும், சீரழிந்தது தான் அதிகம். எந்த விஷயம் கிடைத்தாலும் அதை தப்பாகவே பயன்படுத்தும் சமூகம் நாம். இன்று நடந்திருக்கும் ஆட்சி மாற்றத்திற்கே சினிமா தான் காரணம். இனிமேலும் இது தொடரும். அப்படிப்பட்ட பொறுப்பற்ற ஒரு சமூகத்தினருக்கு படம் எடுக்கிறோம் என்ற உணர்வு இன்று எந்த இயக்குனருக்கும் இல்லை. இவர்கள் செய்வது எல்லாமே கருத்துத்திணிப்பு. அவர்களுடைய கருத்துக்களை, அஜென்டாகளை, ஐடியாலஜியை இந்த சமூகத்தில் திணிக்கும் வேலையைத்தான் பார்க்கிறார்கள். அதைத்தான் எதிர்க்க வேண்டியிருக்கிறது.
இனிமேலும் எதிர்ப்போம்.
Maha devan