06/05/2016
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
குறிஞ்சி நில மக்கள் வாழ்க்கை
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
மலைகளும் குன்றுகளும் அவற்றைச் சார்ந்த இடங்களும் குறிஞ்சி நிலம் என்று கூறினோம். இங்கு இருந்த ஊர்களுக்குக் குறிஞ்சி என்றும் சிறுகுடி என்றும் பெயர்.இங்கு வாழ்ந்த மக்கள் குறவர் என்றும் குன்றவர் என்றும் இரவுளர் என்றும் அழைக்கப்பட்டார்கள்.இறவுளர் என்பவர் இக்காலத்தில் இருளர் என்று கூறப்படுகின்றனர்.இங்குச் சுனை நீர் உண்டு.மலையருவிகளும் உண்டு.பொதுவாக அருவிகள் வேனில் காலத்தில் வறண்டுவிடும்.எக்காலமும் ஓடிக்கொண்டிருக்கிற அருவிகள் மிகச் சிலவே.மலைப் பாறைகளுக்கிடையே செடி கொடி மரங்கள் உண்டு.குறிஞ்சி செடிகளும் காந்தள் செடிகளும் குறிப்பிடத்தக்கவை.மூங்கிற் புதர்கள் உண்டு.வேங்கை,திமிசு,தேக்கு,சந்தனம்,அகில்,கடம்பு,கருங்காலி முதலான மரங்கள் வளர்ந்தன.பறவைகளில் மயிலும் கிளியும் குறிப்பிடத்தக்கவை.புலி,யானை,சிறுத்தைப்புலி,கரடி,காட்டுப்பன்றி,குரங்கு முதலான மிருகங்கள் இருந்தன.
மலைகளிலும்,மலச்சாரல்களிலும் ஐவன நெல்லையும்,.திணை என்னும் அரிசியையும் பயிர் செய்தார்கள்.மரம் செடி கொடிகளை வெட்டி அப்புறப்படுத்தி வேர்களைக் கிளறிக் கொத்தி நிலைத்தை பயன்படுத்தினார்கள்.பண்படுத்திய நிலத்தை ஏரினால் உழாமல் மண்வெட்டியால் கொத்திக் கிளறி ஐவன நெல்லையும் தினையையும் பயிர் செய்தார்கள்.இவை வானம் பார்த்த பயிர்கள்.பெரும்பாலும் மழையை எதிர்பார்த்துப் பயிரிடப்பட்டவை.
மலையுச்சியிலுள்ள பாறைகளில் மலைத்தேன் கிடைத்தது.வள்ளிக் கிழங்கு பயிராயிற்று பலாப் பழங்கள் கிடைத்தன.யானைகளையும் காட்டுப்பன்றிகளையும் வேட்டையாடினார்கள்.தேனை மூங்கிற் குழாய்களில் ஊற்றிப் பதப்படுத்தி ஒருவகை மதுவை உண்டாக்கினார்கள்.மிகத் தாழ்வான சிறிய குடில்களைக் கட்டி அதன் மேல் தினத்தாளையும் ஐவன நெல்லின் தாளையும் கூரையாக வேய்ந்த குடில்களில் வசித்தார்கள்.இவர்களுடைய வாழ்க்கை கடின வாழ்க்கையாக இருந்தது.இவர்களுடைய உணவு உற்பத்தி போதுமானவையன்று பற்றாக் குறையாகவே இருந்தது.மலைத்தேன்,யானைத் தந்தம் ,புலித்தோல்,அகில் கட்டை,சந்தனக் கட்டை ஆகியவற்றை விற்றார்கள்.இவர்களுடைய வாணிகம் பண்டமாற்றாக இருந்தது.இவர்களுடைய இயற்கைச் சூழ்நிலை நாகரிகம் பெறுவதற்கு ஏற்றதாக இல்லை.
மயிலை.சீனி.வேங்கடசாமி
பதிவு : 02