Thiagu book centre

Thiagu book centre A lending Library- for the love of reading! BOOK PUBLISHERS &SALES.

A nest of books to quench your reading thirst, Thiagu book centre holds books on topics of all interests!

26/08/2026
அரோமா — சிறுகதைத் தொகுப்பு: ஒரு வாசிப்பு அனுபவம்லோகேஷ் ரகுராமன் | சால்ட் பதிப்பகம் | விலை: ₹350இளம் கதாசிரியர் லோகேஷ் ரக...
26/08/2026

அரோமா — சிறுகதைத் தொகுப்பு:
ஒரு வாசிப்பு அனுபவம்

லோகேஷ் ரகுராமன் | சால்ட் பதிப்பகம் | விலை: ₹350

இளம் கதாசிரியர் லோகேஷ் ரகுராமனின் அரோமா சிறுகதைத் தொகுப்பில் பதின்மூன்று கதைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையும் வெவ்வேறு களத்தையும், வெவ்வேறு மனநிலையையும், வெவ்வேறு கதை சொல்லும் உத்தியையும் முன்வைக்கிறது.

இந்தத் தொகுப்பை வாசிக்கும்போது முதலில் கவனத்துக்கு வருவது, ஒரே மாதிரியான கதைகளை எழுதுவதில் ஆசிரியருக்கு விருப்பமில்லை என்பதுதான். காதல், காமம், உறவு, தனிமை, அகங்காரம், மதம், தொன்மம், அறிவியல், இயற்கை, மரணம் எனப் பல தளங்களில் பயணிக்கும் கதைகள், சிறுகதை வடிவத்தின் பல்வேறு சாத்தியங்களை முயன்று பார்க்கின்றன.

1.ஆப்பிளும் விஷமும்

பெண்ணுரிமை, பெண் விடுதலை போன்ற சமகால விவாதங்களின் அடிப்படையில் கல்வியும் பொருளாதாரச் சுதந்திரமும் முக்கியமானவை. ஆனால் ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் உறவுகளுக்குள் அன்பு, விருப்பம், காமம், உடைமை உணர்வு எனப் பல்வேறு உணர்வுகள் எந்த எல்லை வரை பயணிக்கின்றன?

இந்தக் கேள்வியை முன்வைக்கும் கதை ஆப்பிளும் விஷமும்.

வெளிப்பார்வையில் காமமே மையமாகத் தோன்றினாலும், அதற்குள் மறைந்திருக்கும் பல்வேறு மனித உணர்வுகளை ஆசிரியர் தொட்டுச் செல்கிறார். ஆப்பிள் எப்போது விஷமாகிறது? எப்போது அச்சம் உருவாகிறது? உறவின் இனிமை எந்தத் தருணத்தில் வேறு பொருளாக மாறுகிறது? எனப் பல கேள்விகளை கதை எழுப்புகிறது.

2.கூடடைதல்

தன்னை அறிதல் என்பது அறிவால் மட்டும் அடையக்கூடிய ஒன்றல்ல; அது ஒரு தனித்த அனுபவம். அந்த அனுபவத்தை நோக்கிச் செல்லும் மனிதனின் உள்ளப் பயணத்தை நாடகத்தன்மையுடன் காட்சிப்படுத்துகிறது கூடடைதல்.

ஒருவரை ஒருவர் அப்படியே ஏற்றுக்கொள்வது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை கதை நினைவூட்டுகிறது. உறவின் பிரிவையும் இழப்பையும் நேரடியாகச் சொல்லாமல், அறிவுத்தளத்தின் வழியாக வெளிப்படுத்தியிருப்பது இந்தக் கதையின் தனித்துவம்.

ஆனால் வாசகனாக ஒரு கேள்வி எழுகிறது: உணர்வுகளை அறிவால் இவ்வளவு தூரம் மறைத்துக் காட்டுவது சரியா?

3.நிழல்

உண்மையான உலக வாழ்க்கையோடு இயற்கைக்கு அப்பாற்பட்ட மாய நிகழ்வுகளை இயல்பாகக் கலந்து சொல்லும் கதை நிழல்.
வாழ்க்கையின் சில எதார்த்தமான உண்மைகளை மாயாஜால எழுத்தின் வழியாகத் தொட்டுப் பார்க்கிறார் ஆசிரியர். ஒரு சிறிய கூத்தை நிகழ்த்துவது போல கதை நகர்கிறது.

அந்தக் கூத்து வாசகனுக்குள் எத்தகைய அதிர்வை ஏற்படுத்துகிறது என்பதே இக்கதையின் வெற்றி.

4.மதி நோக்கி அலர் விரித்த ஆம்பல்

தொல்காப்பியன் காலத்திற்குள் வாசகனை அழைத்துச் செல்லும் காதல் கதை.

காலத்தைப் பின்னோக்கி நகர்த்தியிருந்தாலும், இயற்கையோடு இயைந்த சொல்லாடல்கள் கதைக்கு அழகு சேர்க்கின்றன. உவமை மற்றும் காட்சிப்படுத்தலின் வழியாகக் காதலைச் சொல்லும் இந்தக் கதை, நவீன உலகின் காதலில் இருந்து வெகு தொலைவில் நின்று கொண்டிருக்கிறது.

எண்ணங்களின் வழியே மனிதன் எத்தனை காலத்தையும் எத்தனை தூரத்தையும் கடந்து செல்ல முடியும் என்பதற்கு இக்கதை ஒரு சான்று.

5.ஒளி நிறைந்தவர்கள்

மனித வாழ்வில் நிறைவு என்று ஒன்று இருக்கிறதா?

இருந்தாலும் இல்லாவிட்டாலும், மனிதன் அதைத் தேடிக்கொண்டே இருக்கிறான். அந்தத் தேடலின் ஒரு வடிவமாகக் கர்நாடக மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் பழங்குடியினரின் தொன்மத்தை முன்வைக்கிறது ஒளி நிறைந்தவர்கள்.
‘ஒளியை உட்கொள்ளுதல்’ என்ற தொன்மத்தின் வழியாக அறிவியல், நம்பிக்கை, மாயம், மனிதனின் சுயதேடல் ஆகியவை ஒன்றோடொன்று சந்திக்கின்றன.
தன்னைத் தானே கண்டுபிடிக்கிறானா மனிதன்? அல்லது அனைத்தையும் அறிவியலால் பகுத்து ஆராய்கிறானா?

இந்தக் கேள்விகளுக்கு இடையில் ஒரு மாயத்தன்மை கொண்ட எதார்த்தத்தை ஆசிரியர் உருவாக்குகிறார்.

6.செப்டம்

எதுவுமே இப்படித்தான் அமையும் என்ற நிச்சயத்தன்மை வாழ்க்கையில் இல்லை.
எப்படியோ அமைந்த வாழ்க்கைக்குள் சிக்கிக்கொண்ட மனிதன், தான் வாழ முடியாத விரிந்த வாழ்க்கையை கற்பனையின் வழியே உருவாக்கிக் கொள்கிறான். நினைவுகள், எதிர்பார்ப்புகள், தனிமை ஆகியவை அவனுக்குள் இன்னொரு உலகத்தை உருவாக்குகின்றன.

கூடுதலாக இருக்க வேண்டிய ஒருவர் இல்லாதபோது, அவரை நினைவின் வழியே உருவாக்கிக்கொள்வது எவ்வளவு ஆழமானதும் அதிர்ச்சிகரமானதுமாக இருக்கிறது என்பதை இந்தக் கதை உணர்த்துகிறது.

அவன் எதிர்பார்த்த வாழ்க்கை, அவன் வாழ்ந்த வாழ்க்கை, அவன் இப்போது வாழும் வாழ்க்கை — மூன்றுமே ஒன்றா?
செப்டம் என்பது பொருத்தமான தலைப்பு. ஒரு சொல்லுக்குள் ஒரு தவிப்பையே அடைத்து வைத்திருக்கிறார் ஆசிரியர்.

7.பொன்மார்

மனித மனத்தின் வழித்தடங்களில் பயணித்து, காமத்தின் பசியைத் தீர்த்துக் கொள்ளும் கதையாக பொன்மார் அமைந்துள்ளது.
காமத்தைச் சுற்றி பல நியாயங்களை மனிதன் உருவாக்கிக் கொள்கிறான். கதையின் நாயகனும் தனது காம அனுபவத்தை அன்றாட வாழ்க்கையின் பிடியிலிருந்து விடுவிக்கும் ஒரு விமோசனக் கணமாகப் பார்க்கிறான்.

வாழ்க்கைச் சூழலுக்கு மனிதன் பல காரணங்களைக் கற்பிக்கலாம். ஆனால் உணர்வுகளின் குவியலுக்குள் இருந்து அவன் தன் காம நிறைவோடு எளிதாக வெளிவந்து விடுகிறான்.

இப்படியும் மனிதர்கள்.

8.புன்னகை

மரணத்தின் புன்னகையை ஒரு பெண்ணின் உதட்டில் கொண்டு வர முயலும் வித்தியாசமான கதை.

ஒரு மெய்க்காப்பாளன் தனது ஆழ்மன உணர்வுகளில் சிக்குண்டு, காமத்தின் வெளிப்பாட்டை ஒரு வன்முறைச் செயலாக மாற்றிக் கொள்கிறான்.

இங்கே கதாநாயகன் யார்?

சூழ்நிலையின் கைதியாகிவிட்ட மேல்தட்டு வர்க்கப் பெண்ணின் ஆழ்மனமா?
கட்டமைக்கப்பட்ட இயந்திர மனிதனின் உள்ளக் கிடக்கையா?

அல்லது இவர்கள் இருவரையும் கட்டி இழுக்கும் ஒற்றை நூலின் மறுமுனையில் இருக்கும் சமூகமா?

இந்தக் கேள்விகளோடு கதை நம்மை நிறுத்துகிறது.

9.கறை

மதம் சார்ந்த சமகால நிகழ்வு ஒன்றைக் கருவாகக் கொண்டு எழுதப்பட்ட கதை கறை.
நிகழ்வின் பல்வேறு அம்சங்களை மெதுவாக உதிர்த்துக் கொண்டே வந்து, இறுதியில் தன் பார்வையையும் முன்வைக்கிறார் ஆசிரியர்.

அது ஒரு கறையான செயல்பாடு; ஏற்றுக்கொள்ள முடியாதது என்ற நிலைப்பாடு கதைக்குள் வெளிப்படுகிறது.

அந்த அரசியல் சார்ந்த பார்வையை கையாள மன உளவியல் தேவைப்படுகிறது. அந்தத் துணிச்சல் ஆசிரியரிடம் இருப்பதை இக்கதை காட்டுகிறது.

அந்தப் பார்வை சரியா, தவறா என்ற விவாதத்திற்குள் செல்லாமல், தனிமனித மன உறுதியை வெளிப்படுத்தியிருப்பதே இந்தக் கதையின் முக்கியமான அம்சம் என்று பார்க்கலாம்.

10.நரை விதை

காலம், இதிகாசம், தொன்மம், சமகால வாழ்க்கை — இவற்றை இணைத்து எழுதப்பட்ட கதை நரை விதை.

மகாபாரதத்தின் ஒரு சிறு இடைவெளிக்குள் தனது கற்பனையைப் புகுத்தி, அதிலிருந்து ஒரு புதிய அர்த்தத்தை உருவாக்குகிறார் ஆசிரியர்.

தேவவிரதன், பீஷ்மர், கங்கைத்தாய், அர்ஜுனன் ஆகிய இதிகாசப் பாத்திரங்களோடு சமகாலத் தாத்தா, பாட்டி, பேரன், நட்புக் குழந்தை எனக் காலங்களை இணைத்து கதையை நகர்த்தியிருப்பது சுவாரஸ்யமான உத்தி.

“அடடா... இதற்கும் இப்படியொரு காரணமா?” என்று வாசகனை யோசிக்க வைத்து, அதே நேரத்தில் புன்னகைக்கவும் செய்கிறது கதை.
ரதசப்தமி நாளன்று எருக்க இலைகளைத் தலையில் வைத்து குளிக்கும் வழக்கத்திற்கும் ஒரு கதை காரணத்தை உருவாக்குகிறார்.

இந்தியப் பாரம்பரியத்தில் ஏதோ ஒரு நூல் காலம் காலமாகவும், யுகம் யுகமாகவும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் கதை இது.

11.கடல் கனித்தது

இதயம் கனக்கவில்லை. கண்களும் கனியவில்லை. ஆனாலும் “என்ன இது?” என்று வாசகனை யோசிக்க வைத்த கதை.

கணவனின் ஆளுமைக்கு அடங்கிப்போன மனைவி. அவள் தீர்க்க சுமங்கலியாக இறந்துவிட்டாள் என்ற நம்பிக்கைக்குள் வாழும் கணவன். மனைவியின் வாழ்க்கையையும் தன்னுடைய உரிமையையும் ஒன்றாகக் கருதிக் கொண்டிருந்த அவனுக்குள் இருந்த தாகம் எப்படி தீர்கிறது?

உடமை கொண்டாடும் மனத்தில் உண்மையில் என்ன இருந்தது? எது இல்லை?
இந்தக் கேள்விகளை அமைதியாக எழுப்புகிறது கடல் கனித்தது.

12.நீமோ

அகங்காரம், ஆணவம் ஆகியவற்றின் இன்னொரு பெயராக ‘பித்து நிலை’யைக் கையாள்கிறார் ஆசிரியர்.

ஆழ்கடல் உயிரினமான அனிமோனியின் நுனியில் இருக்கும் கொடுக்கைப் போல, தன் மீது தானே பித்து கொண்ட மனிதனின் அகங்காரமும் பிறரை நோக்கிக் கொட்டிக் கொண்டே இருக்கிறது.

பெண் என்பவள் உள்வெளியில் எல்லாமாக இருந்தும், வெளியே யாருமற்றவளாக ஒரு நீமோ மீனைப் போல வாழ்வைக் கடந்து செல்கிறாளா?

பயணக் கட்டுரையைப் போல ஒரு பயணத்தின் அனைத்தையும் விவரிப்பது ஒரு வகை. ஆனால் ரத்தமும் சதையுமாக இரு மனிதர்களைப் படைத்து, அவர்களுக்குள் ஓங்கி நிற்கும் பித்து நிலையை இயல்பான உரையாடல் மற்றும் நிகழ்வுகளின் வழியே வெளிப்படுத்துவது வேறு வகை.

தான் எனும் அகங்காரத்தின் வெளிப்பாட்டை ஒரு புதிய களத்தில் நுட்பமாகக் கோர்த்திருக்கிறார் ஆசிரியர்.

13.அரோமா

தொகுப்புக்குத் தலைப்பாக அமைந்திருக்கும் அரோமா வாசனை உணர முடியாத ஒரு கதாநாயகனின் வழியே நகர்கிறது.

பள்ளிக்கூட நட்பு, பள்ளிப் படிப்பு, சக மாணவனின் குடும்பத் தொழிலின் வாசனை, ஆன்மீகம் கலந்த வராக அவதாரத்தின் நுகர்தல், வேதியியல் வகுப்பில் பரிசோதனையின் மூலம் உணரும் வாசனை என அவனைச் சுற்றியிருக்கும் உலகம் ஒவ்வொன்றாகப் புரிதல்களாக மாறுகிறது.

ஒரு பொருள் வேறு பொருளாக மாறும்போது வெளிப்படும் பண்பின் வழியாக, அந்தப் பொருளின் மாறாத தன்மையான வேதியியல் அமைப்பை உணர்ந்து கொள்வது போல, மனிதனும் தனது வாழ்க்கையின் மாற்றங்களுக்குள் இருக்கும் மாறாத தன்மையைத் தேடுகிறான்.

இந்தப் பிறப்பில், இந்த வாழ்க்கையில் நம்முடைய நிறை-குறைகள் எவை என்பதை உணர்ந்து, அவற்றைக் கடந்து, நம்முடைய தெளிவான குறிக்கோளை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற உணர்வை இக்கதை ஏற்படுத்துகிறது.

இறுதியாக...

பதின்மூன்று கதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பிற்கு அரோமா என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்திருப்பது பொருத்தமானதாகவே தோன்றுகிறது.

தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதைக்கும் தனித்த வாசனை இருக்கிறது. காதலின் வாசனை, காமத்தின் வாசனை, தனிமையின் வாசனை, தொன்மத்தின் வாசனை, மண்ணின் வாசனை, மாயத்தின் வாசனை, அறிவியலின் வாசனை என பல்வேறு வாசனைகள் ஒன்றோடொன்று கலந்து இந்தத் தொகுப்பை உருவாக்குகின்றன.

குறிப்பாக அரோமா என்ற கதையில் ஆசிரியரின் அறிவுத் தேடலும், தன்னார்வமான கற்றலும், பல்வேறு விஷயங்களை ஒரு கதைக்குள் கொண்டு வந்து பார்க்கும் ஆர்வமும் மிகத் தெளிவாகத் தெரிகிறது.

சில இடங்களில் ஒரு சிறுகதைக்குத் தேவையான அளவைவிட அதிகமான விஷய அறிவு பதிவாகியிருப்பதாகத் தோன்றினாலும், அதனால் கதையின் சுவாரஸ்யம் பெரிதாகக் குறையவில்லை.

லோகேஷ் ரகுராமனின் எழுத்தில் ஒரு நிச்சயத்தன்மையை உணர முடிகிறது. அதைவிட முக்கியமாக, சிறுகதையின் எல்லைக்குள் பல்வேறு உத்திகளை முயன்று பார்க்க வேண்டும் என்ற ஓர் எழுத்தாளரின் பேராவல் தொடர்ந்து வெளிப்படுகிறது.

ஒரே பாதையில் நடக்காமல், ஒவ்வொரு கதையிலும் வேறொரு பாதையைத் தேர்ந்தெடுத்து நடக்கிறார்.

அந்தப் பாதைகள் அனைத்தும் இன்னும் நீண்ட பயணத்திற்கான தொடக்கங்களாகவே தெரிகின்றன.

லோகேஷ் ரகுராமன் என்ற இளம் கதாசிரியரின் இந்த முயற்சி மேலும் பல நல்ல கதைகளுக்கான முன்னோட்டமாக அமையட்டும்.

மேன்மேலும் வளர்ந்து, தமிழ்ச் சிறுகதை உலகில் தனக்கென ஒரு தடத்தைப் பதிக்க மனமார்ந்த வாழ்த்துகள், நண்பரே!

சோளம் சந்திரா தங்கராஜ் சிறுகதை தொகுதி எதிர் வெளியீடு 1. பூனைகள் இல்லாத வீடு வாழ்க்கை என்பது என்ன? காலத்தின் துணைகொண்டு ந...
10/05/2026

சோளம்
சந்திரா தங்கராஜ்
சிறுகதை தொகுதி
எதிர் வெளியீடு

1. பூனைகள் இல்லாத வீடு

வாழ்க்கை என்பது என்ன? காலத்தின் துணைகொண்டு நகர்ந்து கொண்டே இருக்கும் வாழ்க்கை.

தொலைவதும் தொலைந்து போவதும் பிடித்து நிற்பதும் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

நகர்ந்தவர்கள் மத்தியில் தொலைந்து போவது எது?

வாழ்ந்த வாழ்க்கையின் நினைவுகள் மட்டுமே.

2. அழகம்மா

சோளக்காட்டு கிராமங்களில் ஒலிக்கும் தனித்துவமான ஒரு மாயக் குரல். பச்சை வண்ணத்தில் கருமை சிந்திய ஒரு மாயப்பூச்சு. பெண்ணின் மீதான காமம் எந்த எல்லைக்கும் செல்லும்.

பங்குனி கடைசியில் பூக்கத் தொடங்கும் வேப்பமரம், சித்திரைக்குள் பூத்து முடித்து விடும். ஆடியில் வேப்பம் பழங்கள் கீழே விழும். எழுத்தாளர் கவனம் கொள்ள வேண்டிய இடம்.

3. கட் சொன்ன பிறகும் கேமரா ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆணாதிக்கம் மிகுந்த திரைப்படத்துறையில் பாலியல் சீண்டலின் ஒரு துளி. அதை ஏற்றுக் கொண்ட பெண்மை செல்லும் தூரம் மிக அதிகம். பார்வையின் பக்கங்களில் பதியும் எல்லாவற்றையும் கடந்து செல்ல வேண்டும் என்பது பொதுத் தகவா..!

4. அழகேசனி பாடல்

ஆசிரியரின் பார்வையில் ஒரு சின்ன காதல் கதை.
ஏதோ ஒரு காரணத்தால் அன்பும் பிரிவும் காதலாக மாறி கூடு அடைகின்றது. ஆனால் அந்தக் கூட்டில் வாழ முடியாமல் கலைந்து போவது அதிகமாக இருக்கின்றது.

".... பிடிச்சவங்களோட வாழ முடியாத இந்த மனுஷ வாழ்க்கை கொடூரமானது ." என்று காதலுக்கு ஒரு டெபினிஷன் கொடுக்குறாங்க.

"...ஒருத்தர் சந்தோஷத்துக்காக இன்னொருத்தர் சந்தோசத்தை பறிச்சுக்கிட்டே போற இந்த வாழ்க்கையில் மொத்தத்தில் யாரும் சந்தோஷமா இருக்கிறது இல்லை" என்று பொதுப்படையாக ஒரு முடிவுரையும் எழுதுகிறார்.

ஆனால் எல்லோர் வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கிறதா..?

5. புளியம்பூ

ஒரு கிராமத்து விவசாய சம்சாரியின் விவசாய கனவுகள் கரைந்து போன கதை.

ஒத்திக்கு எடுத்த கடலைக்காடும் சொந்தமாக்கிய காட்டில் வேப்ப மரங்களை நட்டு, பார்த்து பார்த்து வளர்ந்திய வேப்பங்காடு வெறும் வேப்பம்பூ வாசத்தில் காணாமல் போயிற்று.

ஒரு உழைப்பும் பலன் இல்லாமல் போகும் பொருளாதாரச் சூழ்நிலை.

6. துயரம் எனும் சிறு புள்ளி

உண்மை நிலையை விட அதிகமாக கூறும் மிகைப்படுத்தும் தன்மை வரிக்கு வரி அமைந்திருக்கின்றது.

ஒப்பீட்டு நோக்கில் அதிகப்படியான வர்ணனை கலந்து சொல்வது கதையின் சிறப்பை கூறுவதற்கு பதிலாக மெல்லிய நெருடலாக மனதில் பதிகிறது.

ஆனாலும் காதல் என்பதற்கு இன்னொரு சூத்திரத்தை உருவாக்கி காட்டி, அது எதுவரைக்கும் செல்லும் என்பதை சொல்லி இருக்கிறார் ஆசிரியர். அதுவும் அந்த உளவியலாளர் வார்த்தைகளில் அடங்கியிருக்கின்றது.

7. கள்வன்.

சிறுகதை கூட்டுக்குள் அடையாத ஒரு கதை.

இது அது என தொடர்ந்து சம்பவங்களின் கோர்வைதான் கதையாக மாறவில்லை.

8. மருதாணி

நாம் நமக்கு இட்ட கட்டுக்கோப்பான சட்ட திட்டங்களை மீறி செயல்படும் காமம்.
ஏதோ ஒரு விதத்தில் வெந்து தனியும் மருதாணியும் அவ்வாறு வெந்து தணிந்த கதாபாத்திரம்.

பற்றிக்கொண்ட காமத்திற்கு முன்னால் வேறு எந்த நினைவுகளும் இல்லாமல் நேரடியாக தன்னை காமத்தில் தொலைத்துக் கொள்ளும் கதை வெறுமனே அவசரமாகக் கதைக்கப்பட்டுள்ளது.

9. சூது நகரம்

நகரத்தின் பரபரப்பு மீதும் பகட்டின் மீதும் அப்படி என்ன வெக்கை.

நேரடியாக நகரத்தின் விஸ்திரத்தில் கலந்து கொள்ளும் மூன்று கதாபாத்திரங்களும் வாழ்க்கையை தொலைத்து விடுவது மாலை முரசு பத்திரிக்கையில் செய்தி வாசிப்பது போல் இருக்கின்றது.

10. காட்டின் பெரும் கனவு

இயல்பாய் இயற்கையை விவரிக்க முயற்சி செய்திருக்கும் ஆசிரியர் அதில் இளமைக்கால காதலையும் கூட்டி அலைந்து இருக்கிறார்.

இளமைக் கால காதல், வாழ்வின் ஒரு பகுதி. அதை ஒரு அழகான கனவாக மனதில் புதைத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு சென்று விடுபவர்கள் நிறைய உள்ளனர்.

இங்கு அதை ஒரு துன்பக் கனவாக மாற்ற முயற்சிக்க, அவ்வளவு இயல்பாக கூடி வரவில்லை.

11. பன்னீர் மரத் தெரு

காலை நேர பன்னீர் மலர்கள் அதீத வாசம் வீசி, உச்சி வெயிலில் வாடி, வதங்கி, பூவாக இல்லாமல் போவது போல...

ஒரு இளம் பெண்ணின் திறமையும் மகிழ்வும் தனித்து மகிழ்ந்து நிற்க, கேட்பாரற்று காணாமல் போவதற்கு...

உளவியல் பார்வையில் மனப்போராட்டத்தை சொல்ல முயற்சித்திருக்கும் கதை.

12. ராஜா ராணி ஜோக்கர்

தொலைத்த இடத்தில் மீண்டும் மீண்டும் விடாமல் தேடுவதுதான் சீட்டு ஆட்டத்தின் சாபக்கேடு..

அதில் கெட்டு சீரழிந்தவர்களின் வாழ்க்கை கதை எண்ணற்றவை...

அதே போல் மீண்டும் கிராமிய சூழலில் ஒரு சிறுகதை. வெறுமனே கதை சொல்லல் முறையில் தனக்குத் தெரிந்த குறியீட்டு மனிதர்களை வெளிப்படுத்தி உள்ளார் கதாசிரியர் .

இறந்து போன முத்து கழுவனின் மனதில் என்ன இருந்தது என்பதற்கான ஒரு வரி கோடி காட்டி இருந்தால் கதையின் போக்கு முற்றிலும் மாறியிருக்கும்.

13. தொலைவதின் புதினம்

தான் பார்த்த, படித்த, சேகரித்த, உணர்ந்த அத்தனை செய்திகளையும், கோர்வையாகக் கோர்த்து ஒரு சிறுகதையாக்கிய கதாசிரியர்.....

கடைசியில் கதை நாயகனின் மன உணர்ச்சிகளின் வழியாக இந்த கதையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தொலைவதின் புதினம் அத்தனை இயல்பானதும் உயர்வானதும் அல்ல.

அது எப்படி வேண்டுமானாலும் மாறும். மாறும் என்பதுதான் விதி.

விதி போட்ட கோட்டிற்கு அருகே கதாசிரியர் தன் கோட்டை சிறுகதையாக விவரித்திருக்கிறார்.

14. வெகு நாட்களுக்கு பின்னான மழை

வெட்ட வெளியில் கொட்டிக் கிடக்கிறது வெயில். அப்படியான வெயில் சூழ்ந்த கரட்டுப்பட்டி கிராமம். அங்கே மீதம் இருக்கும் வயோதிக குடும்பம். அவர்கள் கண்களில் விரியும் கிராமத்தின் அழகு.

இன்றும் நாடெங்கும் ஏராளமான கிராமங்கள் இப்படி இருக்கின்றன. அங்கும் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வரட்சியும் செழிப்பும் தொலைந்து போன ஒரு கிராமத்திலிருந்து பிரிந்து போன வாழ்வைத் தொலைத்தவனின் கனவுகளில் பதிந்து இருந்த காயங்களின் பிரதிபலிப்பு.

பெய்யெனப் பெய்யும் மழையில் அனைத்தும் கரைந்து விடுமா என்ன ?ஆனாலும் அவன் கரைந்த பொழுது மழை பெய்தது.

கூடி வந்த சிறுகதை.

15. கிழவி நாச்சி

கிராமத்துக் காற்றில் வீசும் உண்மையும் பயமும் கலந்த ஒரு பேய் கதை.

உண்மையை பொய்யாகவும் பொய்யை உண்மையாகவும் சொல்லும் ஒரு எதிர்மறை கதை இது. இயல்பாய் அமைந்துள்ளது.

16. அறைக்குள் புகுந்த தனிமை

எந்தவித நுணுக்கங்களும் இல்லாத ஒரு போங்கு ஆட்டத்தை ஆடி பார்க்க, துணிந்து கதை ஒன்றை எழுத முற்பட்டிருக்கிறார்.

எல்லாவற்றிலும் திருப்திப்பட்டுக் கொண்டு இருப்பவர்கள் போதாமையில் உழல மாட்டார்கள் என்று தத்துவம் வேறு.

தன்னை பின் தொடர்ந்த வாலிபனை
விபச்சாரம் என்று சொல்லி அழைத்து வந்து தன் அறைக்குள் ஒரு இரவு முழுவதும் பூட்டி வைத்து, கதற விட்டு காலையில் எதுவும் நடவாதது போல் வெளியே அனுப்பிவிடுவது ..

என்ன விதமான போங்கு ஆட்டம்.

டி நகர் கோடம்பாக்கத்தில் இருந்து மெரினா பீச் வரை ஞாயிற்றுக்கிழமை பணி நிமித்தமாக ஒருவரை சந்திக்க விரும்பும் தோழியையும் கூட்டிக்கொண்டு
தனிமையை தொலைப்பதாக
விவரம் சொல்லிக் கொண்டு கடைசியில்
பெண்மையின் மீது நட்பு பாராட்டும் பெண்மையை கோடி காட்ட ஒரு போங்காட்டம் ஆடிபார்த்திருக்கிறார்....

19 70களின் பிற்பகுதியில் இலக்கிய சிந்தனைகள் முதல் பரிசு பெற்ற சிவசங்கரி எழுதிய தனிமை எனும் கதை
ஏனோ இப்போது ஞாபகத்துக்கு வந்தது.

17.மஞ்சனத்தி மலை

குமுளிப்பக்கம் இருக்கும் மலை காட்டுக்குள் ஒரு மிளகு காட்டினை சார்ந்து வாழ்ந்து வரும் சிறு பெண்ணின் பார்வையிலிருந்து விரியும் சின்னஞ்சிறு கதை.

மலையடிவார சிறு நகரத்திலிருந்து வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்லும் அப்பா அம்மா சின்ன பெண், வழியில் பேருந்து பயணத்தில் காணும் மலைக் காட்சி,
பக்கத்து வீட்டு கிறிஸ்துவ பையனின் அம்மா காட்டும் அன்பு, நாய்க்குட்டிகள்,
ஒரு சிறு நண்பர்கள் குழு.

முதலில் மோதலும், பின்பு அவர்கள் மூலம் கிடைக்கும் தோழமையும், அது தொலைந்து போவதையும் சொல்லிவிட்டு அந்தப் பெண்ணுக்கும் பையனுக்கும் 10 வயது என்று கூறி மற்ற எல்லாவற்றையும் சிதறவிட்டு விட்ட கதை.

பத்து வயது குழந்தையின் பார்வையில் படும் காட்டின் அழகை சொல்லத் தெரியாமல், ஆசிரியரின் வயதிலிருந்து தன் பார்வையை செலுத்தி அதிலும் முழுமையாக காட்டத் தெரியாமல் ஒன்றிரண்டு விஷயங்களை மட்டும் கூறிவிட்டு வெறுமனே சென்று விடுகிறார் கதாசிரியர்.

"அந்த நொடியில் நான் மலைக்காற்றாக வாவது பிறந்திருக்கலாம் என்று ஏக்கம் பிறக்கும்"

ஆச்சரியங்களும் ஆர்வமும் பிரியமும் வெளிப்படும் வயதல்லவா இது..

தன்னை இயற்கையோடு ஒப்பிட்டுக் கொள்ளும் அப்ஸ்ட்ராக்ட் (abstract) சிந்தனை இந்த வயதில் தோன்றும் வாய்ப்பு இருக்கிறதா என்ன...?

18. ஏழு கன்னிமார்

கதை சொல்லும் விதம் அழகாக வந்திருக்கின்றது.

பெண் குழந்தையின் வயதுக்கான வார்த்தைகளில் மிகவும் சுவாரசியமாக கதை அமைந்திருக்கிறது.

கிராமத்து சூழலில் ஏழு கன்னிமார் கோவிலும், அதைச் சார்ந்த கிணறும், அதன் மீதான குழந்தை பசங்களின் ஆர்வமும் விளையாட்டும், பெரியவர்களின் அதிகாரமும் ஒரு சின்ன சுற்றுக்குள் அவ்வளவு அழகாக வந்திருக்கின்றது.

நல்லவேளை நாளை அடுத்த நாள் மழை வந்தது என்று முடிக்காமல்

அடுத்த வருடம் விருமாண்டித் தாத்தாவை வைய வேண்டும் என்று முடித்திருப்பது.......

சிறு புன்னகையை வரவழைத்தது.

19. வெளிச்சக் கொடி

உள்ளார்ந்த பரிமாணத்தின் வெளிப்பாடாக மலர்ந்துளளது பண்டாரவூத்து கிராமத்துின் கிணற்றடியும், அதன் வெளிச்சமும் ...

தன் தந்தை வழி குடும்பம் சார்ந்த மலை கிராமத்தை எவ்வளவு உள்வாங்கி இருந்தால், இவ்வளவு ஆண்டுகளுக்குப் பின்னும் அதற்கான இடத்தை மனதின் ஓரத்தில் சற்றும் குறையாமல் வைத்திருந்து அதை மீட்டெடுத்த தருணம் அழகாக இருந்தது

ஆங்காங்கே ஆசிரியரின் கூற்றாக வரும் சில வரிகள் அந்தப் பெண்ணின் மனதை வெளிப்படுத்துவதை விட, ஆசிரியரைத் தான் முன்னிறுத்துகிறது.

காலத்தின் மாற்றம் தன் நெருப்பை அங்கங்கே வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.

மற்றபடி மழை கிராமத்தின் பாறைகள் மீது பட்டு தெறிக்கும் வெளிச்சத்தில்,
கிராமத்து மனிதர்களின் அன்பில், வாழ்க்கையில், செயல்பாடுகளில்
பண்டாரவூத்து எனும் பூ கொத்தாக பூத்திருந்தது.

20. அத்துவானக்காட்டு எருமைகளும் அசிஸ்டென்ட் டைரக்டரும் .

திரைப்படத் துறையில் இயக்குனரிடம் துணை இயக்குனராக சேர மாபெரும் கனவுகளுடன் செல்லும் எத்தனையோ இளைஞர்களின் கதையை கண்டு கேட்டுள்ளோம்..

அந்த மாதிரியான சூழலில் ஐந்து வாலிபர்களின் எண்ண ஓட்டத்தில்
நிகழும் ஒரு கதையை கூற முயற்சித்து இருக்கிறார். அதுவும் ஒரே ஓட்டத்தில் விவரனைகளுடன் ...

கதை சொல்லும் களத்துக்கு புதியவர் போல், அனுபவம் இல்லாமல் கட கட கடவென்று ஒப்பித்திருக்கிறார்.

மிக முக்கியமாக ரஜினி கமல் காலத்தில் உத்தரத்தில் தலைகீழாக தொங்கவிடும்
ஆசிரியரை காண்பித்திருக்கிறார்.

கனா காணும் நினைப்பில் கனா கண்டதாக நினைத்துக் கொண்டு முயற்சித்திருக்கிறார்.

கூடி வரவில்லை.

அதில் சமூகத்தின் பார்வை கேலியும கிண்ட ஏதோ ஒன்று இரண்டு உதவும் கரங்கள் கை கொடுக்கின்றன வெற்றியடைந்தானா இல்லையா என்பது வாசகர் ஊகத்திற்கு விடப்படுகிறது

21. நதியில் மிதக்கும் கானல்

இது ஒரு லவ் ஸ்டோரியே இல்லை.
காதல் மீதான நம்பிக்கை உடைந்த பிறகு காதல் எப்படி சாகுதுன்னு ஒரு ஒற்றை வரி கதையை சினிமா தனமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் .

நிறைய உணர்ச்சிகளுடன் காட்சிப் படுத்தி, வழக்கம்போல ஒரு முக்கிய திருப்பத்துடன் முடிவை கவிதையாக சொல்வதாக நினைத்துக் கொண்டு ஏதோ எழுதியுள்ளார். ஒன்றும் கூடி வரவில்லை.

திரைப்படத் துறையில் ஒன் லைன் ஸ்டோரி சொல்லி ஒட்டுமொத்தமாக திரைக்கதையை மேய்வது போல் இருக்கிறது.

ஓடாத நதியில் மிதக்காத கானல்...

22. ரத்தத்தில் மிதக்கும் படுக்கை அறை

தன் மனதில் பதிந்ததையும், தான் கண்டு பார்த்ததையும் குறிப்பு எடுத்துக் கொண்டு வந்து, குறிப்புகளைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தால் ஒரு சிறுகதையாக மாறிவிடுமா என்ன?

துவக்கம் சற்று அழகாக இருப்பது போல் தோன்றினாலும், உடனே தன் கிராமத்திற்கு சென்று கிராமம் தான் அற்புதம்...

அதுவும் தற்போது மாறிவிட்டது...

என்று சொல்வது கேட்டு சலித்து போய்விட்டது.

அப்புறம் மன நலம் திரிந்த பெண்ணிற்கு ஏதாவது ஒரு காரணம் சொல்ல வேண்டுமே, அதற்கு ஒரு சூழலில் கணவனின் அவதாரம் தான் என்று கூறி சிறுகதையை முடித்து அரதப் பழசு... சலிப்புதான் வருகின்றது.

23. வன்மம்.

அந்த நான்கு எழுத்து சொல்லே ஒரு தீவிர தன்மையை உணர்த்துகிறது. ஆனால் இந்த சிறுகதை முழுவதும் மேலெழுந்த வாரியாக துணுக்குச் செய்திகளைப் படிப்பது போல் இருக்கின்றது.

கதாநாயகனுக்கு இன்னொருவர் மீது வன்மம் வருவதற்கு தீவிரமான காரணம், செயல்பாடு ஏதாவது ஒன்று இருக்க வேண்டும்.

அஞ்சாம் வகுப்பு காதல் என்பது ஒரு தீவிரத் தன்மைக்கு அருகே கூட செல்லாமல் இருக்கின்றது.

இதில் இன்னும் ஒரு துக்கம் கடைசியில் நண்பனிடம் இருந்து தந்தை மீது மாறும் பச்சாதாபம்...

என்ன சொல்லுகிறார் இந்த கதையில்..

23. கழிவறைக் காதல் பிரதி.

பிரத்யோகமான வித்தியாசமான கதைக்களம். அதன் பின்னணியில் பூக்கும் காதல். அவரவர் வேலை நிமித்தம் கலைந்து போகும் காதல்.

எங்காவது காதல் பூத்துக் கொண்டுதான் இருக்கும்

காதலெனும் கத்திரிக்காய் வாடி வதங்கிப் போக எத்தனை எத்தனை காரணங்கள்.

அது சரி நான் பார்த்த அளவில் பெரும்பாலும் 18 வயது பெண்கள் யாரும் வண்ணமயமான தாவணி உடுத்திக் கொண்டு, பொதுக் கழிப்பறை வாசலில் அமர்ந்து காசு வாங்கிக் கொண்டு இருப்பதில்லை.

மத்திய வயது அல்லது வயதான பெரியவர்கள், விடலைப் பையன்கள், முரட்டு ஆண்கள்தான் அமர்ந்திருப்பார்கள்..

24.பீத்தோவனும் கலைந்த காதலும்.

உணர்ந்து கொள்ளப்படுவது இசை மட்டுமல்ல காதலும் தான்....

இதைச் சொல்வதற்கு அறிவின் தளத்தில் இருந்து கொண்டு பீதோவன், கிீத்தார் மற்றும் புகைப்பட கலை சார்ந்த காமிரா புத்தகங்கள்...

இவற்றை வைத்துக்கொண்டு இயல்பாக இல்லாத ஒரு களத்தை உருவாக்கி, திரைப்படத்துறை டிஸ்கஷனில் டெவலப்மென்ட் என்ற பெயரில் பிட்டு பிட்டாக செய்யக்கூடிய செயலை செய்து சிறுகதையாக்க முயற்சி செய்திருக்கிறார்.
கூடி வரவில்லை.

25. பூச்சி
எல்லா கதை கருத்துகளும் முன்பே கேட்டது போல், வாசித்தது போல் இருக்கும் ஒரு தொனி இந்த பூச்சி கதையிலும் வந்துள்ளது. ஆனாலும் மிக இலகுவாக வாசிக்க தகுந்த முறையில் அமைந்திருக்கின்றது.

இந்த தொன்மையிலிருந்து ஆசிரியர் மேலெழுந்து வர வேண்டும்.

26. நிகிலா
நம்பி வீட்டை விட்டு காதலின் பொருட்டு வெளிவந்து ஏமாந்து போகிறவர்கள் பலரில் ஏழ்மையில் இருப்பவர்கள் சிலர்.

அவர்களில் ஒருவர் நிகிலா..

படித்து படித்து சலித்த கதை தான்...

சம்பவங்களின் கோர்வையில் சற்றே இயல்பாய் சொல்லிய கதையில் என் செய்வது என்று தெரியாமல் நடாற்றில் விட்டிருப்பது புதிதாக இருக்கிறது .

ஆனால் இது போன்ற ஒரு கதை "பசி " எனும் திரைப்படத்தில் நடுரோட்டில் பிணமாக படுக்க வைத்து புரட்சி செய்து இருப்பார்கள்..

28. தரைதேடிப் பறத்தல்.

எதன் பொருட்டு யார் யாருக்கு அடிமையாக இருக்கிறார்கள். பொத்தி பாதுகாக்கப்படும் உணர்விலிருந்து வழி தெரியா வாழ்வியலில் தன்னந்தனியே பறத்தல் என்பது எவ்வளவு தவிப்பைத் தருகின்றது.

ஏதோ ஒரு மேய்ப்பன் தனக்கு வழிகாட்ட, தான் கண்டடைந்த உலகம் எவ்வளவு பரந்து விரிந்து உள்ளது, அதில் நம் வாழ்க்கை எவ்வளவு சுதந்திரமானது என்று அறியும் பொழுது கனவுகள் விரிகின்றன.

அந்த சுதந்திர கனவுகள் எத்தனை ஆனந்தமானது என்பதை சொல்லாமல் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர்.

29. திறக்கப்படாத பள்ளிக்கூடத்தின் கதவுகள்.

1987 எம்ஜிஆர் மரணமடைந்த காலகட்டத்திற்கு அப்புறமும், தேனி மாவட்டத்தில், மலை சார்ந்த கிராமப் பள்ளியில், மண் தறை வகுப்பு, சிமெண்ட் தறை வகுப்பு, பெஞ்ச் வகுப்பு இருந்ததாக சொல்லப்படும் ஒரு பள்ளிக்கூடத்தின் மாணவ மாணவியர்களின் உளவியல் கூற்றாக தனக்குள் இருக்கும் எல்லா கருத்துக்களையும் கோர்த்துச் சொல்லி இருக்கிறார் இந்த கதையில்...

அந்த காலகட்டத்தில் தனியார் பள்ளிக்கூடங்கள் கூட அரசாங்கத்தின் ஆதரவுடன் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆனால் அதன் சூழ்நிலை இப்படித்தான் இருந்ததா..?

கிராமம் சார்ந்த மக்களின் குழந்தைகள் தொடர் படிப்பு எப்பொழுதும் கேள்விக்குறிதான். அதுவும் பெண்களின் தொடர் படிப்பு என்பது மிகவும் கேள்விக்குறியானதுதான்.

அந்த நிலையில் ஒரு மாணவியன் மனதவிப்பை சற்று அதிகமாக அழகாக குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் முடிவுகள் அதற்கு காரணங்கள் மிக மிக வித்தியாசமாக இருக்கின்றன.

அதுவும் சினிமா தனமாக ...

*******

தன் கிராமம், தன் சிறுவயது வாழ்க்கை, கிராமத்தைச் சுற்றியுள்ள நகரங்கள், புதிதாகப் போன திரைப்படத்துறை என்று தன்னை மையமாகக் கொண்டே சுற்றி சுற்றி சிறுகதைகள் வந்து கொண்டிருக்கின்றன.

இதில் காலம் சார்ந்து குறிப்பிட சில வார்த்தை குறிப்புகள் ஆங்காங்கே தென்படுகின்றன எலியின் மூலம் பரவும் பிளாக் நோய் , கொரோனா, வைரஸ் தொற்று , தியேட்டரில் டிக்கெட் கிழிப்பது,
நகையின் விலை இப்படி குறியீடுகள் வருகின்றன.

வலிமையற்ற இருண்மையின் குறியீடான ஒரு புள்ளியில் இருந்து மேல் எழுந்து வர முயற்சிக்கும் எல்லா தருணங்களையும் விதவிதமாக சுட்டிக் காண்பிக்கிறார்.

முயற்சி என்பது மிக மிக முக்கியம். அப்படி முயற்சித்து சில கவிதைத் தொகுதிகளையும் பல சிறுகதை தொகுதிகளையும் படைத்திருக்கிறார்.

அவரது எழுத்துக்களில் நான் வசித்த இந்த 29 சிறுகதைகளிலும் மேலும் மேலும் சிலுவை படுத்திக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.

தி ஜானகிராமனின் அம்மணியை எழுத்தின் வகையில் சந்திரா தங்கராஜ் உடன் ஒப்பிட்டு பிரபஞ்சன் அவர்கள் ஒரு வரி எழுதி இருப்பார்.
மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

அந்த உயர்ந்த நிலையை அடைய மிகவும் பாடுபட வேண்டும்.

சந்திரா தங்கராஜ் இப்பொழுது தான் முதல் படியில் இருக்கிறார்.

வாழ்த்துக்கள்

கோவை தியாகு நூலகம் பற்றி ஆவணப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல்... பாண்டிச்சேரியில்.... பிரெஞ்சு இன்ஸ்டிடியூஷன் சார்ப...
22/04/2026

கோவை தியாகு நூலகம் பற்றி ஆவணப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல்...
பாண்டிச்சேரியில்....

பிரெஞ்சு இன்ஸ்டிடியூஷன் சார்பாக வியாழன்( 24.04.26) பிற்பகல் 2:30 மணியிலிருந்து ஐந்து முப்பது மணி வரை

வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அனைவரும் வருக

29/01/2026

".....இம்மாதிரிப் பிழையான மதிப்பீட்டிற்கோ அல்லது அழகிரிசாமியின் கதைகளின் வசீகரத்தன்மை எங்கே உறைந்திருக்கிறது என்று காணுவதில் உள்ள சிக்கலுக்கோ அவரின் கதைகளை ஒரு முறைக்கு இரு முறை இடைவெளிவிட்டு வாசிக்கும்போது விடை தெரியவரும்.

முதல் வாசிப்பில் தோன்றும் எளிமை பலவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளாதபடி வாசகனை ஏமாற்றிவிடுகிறது என்று நினைக்கிறேன்.

முதல்வாசிப்பில் நம்மை ஆட்டிக்குலைக்கும் நல்ல எழுத்துக்களே பெரும்பாலும் இரண்டாம் வாசிப்பில் தமது ஈர்ப்பைத் தளரவிட்டுவிடும். ஜெயகாந்தனின் முற்போக்கான கதைகள் இதற்கு உதரணம்.

அழகிரிசாமியின் எழுத்துக்கள் முதல் வாசிப்பைக் காட்டிலும் இரண்டாம் வாசிப்பில்தான் உக்கிரம் ஆற்றலோடு வந்து தாக்குகிறது.

முடிவு சார்ந்த எல்லைக்கு வருவதற்கு முன் விரிக்கப்பட்டிருக்கும் அல்லது கடத்து வந்திருக்கும் நெருக்கடி மிக்க பகுதிகள்மீது வெளிச்சம் விழுகிறது. அதுதான் ஆற்றல் மிக்க கலைப்பகுதியாகவும் மாறுகின்றது.


காலத்தின் கோலங்களை கதையில் வரைந்த கலைஞன்: கு. அழகிரிசாமி என்ற கட்டுரையிலிருந்து....

தமிழ்ச் சிறுகதையின் பெருவழி

13 இலக்கிய முன்னோடிகள் பற்றிய திறனாய்வு கட்டுரைகள்.

சு.வேணுகோபால்

தியாகு நூலகம் பதிப்பகம்
கோவை 30

நூல் தேவைக்கு அணுகவும் 94433 95895

மணல் வீடுஇதழ் எண் 57.தொடர்புக்கு...எம். ஹரிகிருஷ்ணன்.98946 05371Smoke and AshesAmitav Ghoshஇந்த ஆங்கில நூல் பற்றிய கட்டு...
19/01/2026

மணல் வீடு
இதழ் எண் 57.

தொடர்புக்கு...
எம். ஹரிகிருஷ்ணன்.
98946 05371

Smoke and Ashes
Amitav Ghosh

இந்த ஆங்கில நூல் பற்றிய கட்டுரை ஒன்று பாலசுப்ரமணியம் முத்துசாமி எழுத்தில் மணல் வீடு இதழ் எண் 57 வந்திருந்தது. வாசித்தேன்.

டச்சுக்காரர்கள், போர்த்துக்கீசியர்கள், இங்கிலாந்து நாட்டினர், அமெரிக்க வியாபாரிகள் ஒன்று சேர்ந்து கிழக்கத்திய உலகை சுரண்டித் தின்ற செய்கையை மீண்டும் இந்த புத்தகத்தில் எழுதியுள்ளார் அமிதவ் கோஷ்.

தனக்குத் தேவையான தேயிலையை எடுத்துக்கொண்டு ஒப்பியம் எனும் போதைப் பொருளை விளைவித்து கிழக்காசிய நாடுகளை அதுவும் முக்கியமாக சீனாவை படுகுழியில் தள்ளிய மேற்கத்திய நாடுகளின் திட்டமிட்ட வியாபார தந்திரம்.

ஒரு நூற்றாண்டு கால இழிவுக்காக வெட்கி தலை குனிய வேண்டிய செயல்பாட்டிற்கு இன்றும் தலை சாயாது கொக்கரிக்கும் மேற்கத்திய நாடுகள்.

இந்தக் கட்டுரையின் ஆசிரியர் இந்த புத்தகம் ஏன் முக்கியமானது என்பதற்கான காரணமாக....

"....இந்தப் புத்தகம் வரலாற்றை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அணுகுகிறது. ஐரோப்பியரின் காலணி ஆதிக்கத்திற்கு பேராசை என்பது காரணம் என்றாலும், அந்த காலணி ஆதிக்கப் போர்களை நடத்த தேநீர் மற்றும் ஓப்பியம் என்னும் இரண்டு தாவரங்கள் உதவின என்பது ஒரு புதிய பார்வை.. மேலும் மேற்கத்திய காலனி ஆதிக்கம் தெற்காசிய நாடுகளுக்கு பொருளாதார கட்டமைப்பையும் நவநாகரிகத்தையும் கொண்டு வந்தது என கட்டமைக்கப்படும் ஒரு வரலாறு பெரும் பொய். சில விதி விளக்குகளைத் தவிர ஐரோப்பிய அணுகுமுறைகை்குப் பின்னால் இருந்த நோக்கம் மாபெரும் கொள்ளைதான்.

வெட்கி தலை குனிய வேண்டிய விஷயம்.

Address

#32, First Floor, Captain. Palanisamy Layout, Thadagam Road, R S Puram, Coimbatore/
Coimbatore
641002

Opening Hours

Monday 9:30am - 8pm
Tuesday 9:30am - 8pm
Wednesday 9:30am - 8pm
Thursday 9:30am - 8pm
Friday 9:30am - 8pm
Saturday 9:30am - 8pm
Sunday 10am - 1pm

Telephone

+919443395895

Alerts

Be the first to know and let us send you an email when Thiagu book centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thiagu book centre:

Shortcuts

Share

Category